வாலி

ஏழிசை மன்னர் எம். கே.டி. யின் வெற்றி அவரது நடிப்பில் மட்டுமல்ல, பாடல் படிப்பதிலும் இருந்தது.
    அவர் நடித்தது ஒன்பது படங்களாய் இருந்தாலும் முத்து நவ ரத்தினமாய், முழுவெண்மதியாய் ஜொலித்ததை யாரும் மறக்க முடியாது.
    மகாகவி என்ற சொல் பாரதியை மட்டுமே குறிப்பது போல, பாகவதர் என்று சொன்னால் அச்சொல் எம்.கே. தியாக ராஜ பாகவரையே குறித்தது.

பாகவதர் குறித்து கவிஞர் வாலி

    இசைக்கு மயங்காத இதயங்கள் உண்டா? இன்னிசைக்கு வசமாகா உள்ளம் உண்டா? எம்.கே.டி.ஐப் பற்றிக் கவிஞர் வாலி புதுக்கவிதை பாடும்போது
    “பிற நட்சத்திரங்கள் பருவ நட்சத்திரம்! தியாகராஜ பாகவதர்     ஒருவர்தான் துருவ நட்சத்திரம்.  
    இன்னும் மின்னுகிறார், இசையால் – நம்
    இதயங்களைத் தின்னுகிறார்
    ஆடவரே ஆசைப்படும் ஆடவன்
    அற்றை நாளில் அருந்தமிழர் செவிகளை
    அடகு பிடித்த அபூர்வப் பாடகன்“
என்று சொன்ன கவிஞர் வாலி, ஏழிசை வேந்தராய் பாகவதர் ஜொலித்ததை அழகாகப் பதிவு செய்கிறார்.
”ஏழிசை அவனால் வாழிசை ஆனது, மகர
யாழிசை கூட அவன் குரலிடம் யாசகம் போனது,
இசைக்கு இசை சேர்த்தவன்,எண்
திசைக்கும் தித்திப்பை வார்த்தவன்
குரல் வழியே குடம் குடமாய்க்
குறிஞ்சித் தேனைக் கொட்டியவன்
கந்தருவ கானம் எனும்
மந்திரத்தால் மனங்களைக் கட்டியவன்
நற்றமிழர் நாக்குகளில் – எஞ்ஞான்றும்
நீங்கா வண்ணம் தன் நாமத்தை ஒட்டியவன்
எட்ட இனி எல்லையில்லை எனும்படி
புகழை எட்டியவன்“
என்று பாகவதரின் பண்ணைப் பாசத்தோடு கவிஞர் வாலிப் பாடிப் பரவுகிறார்.