தமிழிசை

தமிழிசை வளர்த்த தண்டமிழ் நடிகர்

தமிழ்நாட்டு இசை மேடைகளில் தெலுங்குப் பாடல்களே ஒலித்த காலத்தில் 1942இல் செட்டி நாட்டரசர் ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைச் மன்றத்தைத் தொடங்கினார்.
தியாகையரின் கீர்த்தனைகளையும் முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளையும் தன் வெண்கலக் குரலால் மேடைகளில் பாடிய எம்.கே.டி, அதன்பின் உலகின் பல நாடுகளுக்குச் சென்று தமிழ்ப் பாடல்களைப் பாடத் தொடங்கினர்.
பாகவதரின் எட்டாவது படம் “சிவகவி“.  எஸ்.எம். ஸ்ரீ ராமுலு நாயுடு படத்தை இயக்க, டி.ஆர். ராஜகுமாரி பாகவதருடன் அப்படத்தில் நடித்தார். சோழநாட்டுப் புலவர் பெருமக்கள் குழுவைச் சார்ந்த பெண்ணாக நடித்தார்.  சிவகவியின் அத்தனைப் பாடல்களும் செவிநுகர்க் கனிகளாய் அமைந்தன.
“அருந்தமிழே உன்னால் இருந்தேன் தமிழ்த்தேன் பருகி வளர்ந்தேன், இசைத் தேனில் நனைந்தேன்.  தமிழிசையால் சிறந்தேன்“    என்று எம்.கே.டி. அருமையான தமிழ் அமுதுப் பாடலைச் “சிவகவியில்“ வைத்தார்.  அருந்தமிழ்ப்பாடலைப் பாடினார்.  
    “தமியேன் பைந்தமிழ் அன்னையின்
    பாலருந்தித் தவழ் பாலன்
    தமிழ்வளர உயிர்வாழும் ஊழியனென்று உலகறியும்
    தமிழரசி அங்கயர்க்கண் உமையன்னையே தயவில்லையா?
    தமியேனுக்கும் இதிலமர இடமில்லையோ?
    தகவில்லையோ?
    தருணம் வந்து எனை ஆளாய்ச் சரணடைந்தேன்
    இனித் தாளேன் வரமருள்வாய்
    சபை நடுவேவரும் இழி உந்தனைச் சாரும்“
    டி.கே.சி, கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ். சுப்புலட்சுமி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் ஆகியோருடன் பாகவதர் தமிழிசை மலரப் பாடுபட்டார்.
    1957ஆம் ஆண்டு பாகவதர் நடித்து வெளிவந்த “புதுவாழ்வு“ எனும் திரைப்படத்தில் ராமலிங்க அருட்பிரகாச வள்ளலாரின் பாடலை
   
“அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும்
    ஆருயிர்கட் கெல்லாம் நானன்பு செயல் வேண்டும்“                                             (புதுவாழ்வு)
    வள்ளலாரின் அருந்தமிழ்ப் பாடல் பட்டிதொட்டிகளில் பரவப் பாகவதர் பெரும் காரணமாக அமைந்தார்.  கச்சேரியின் பெரும்பாலான நேரத்தைத் தமிழ்ப் பாடலுக்காகவே பாகவதர் ஒதுக்கினார்.  “புதுவாழ்வு“ படத்திலும் “அமர கவி“ படத்திலும் பாகவதருடன் கலைவாணர் நடித்தார்.
    “புதுவாழ்வு“ எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் புது வாழ்வைத் தந்தபடம் என்றுதான் சொல்ல வேண்டும்.  வள்ளலாரின் நற்றமிழ்ப் பாடலை அப்படத்திற்காகப் பாடிய பாகவதர், மகாகவி பாரதியின்
    “சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா
    சூரிய சந்திரரோ
    வட்டக் கரிய விழி கண்ணம்மா
    வானக் கருமைக் கொல்லோ
    பட்டு கருநீல புடவை பதித்த நல்வைரம்
    நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி“
என்று எம்.கே.டி. தமிழிசையாய் ஒலித்தார்.
    பாரதியின் பாடல்களை எத்தனையோ குரல்களில் கேட்டிருந்தாலும் எம்.கே.டியின் தேனிசை எல்லோர் மனதிலும் சட்டெனத் தொட்டது.  அதன் பின் பல நூறு முறை பாரதியார் பாடல்கள் தமிழ்த் திரைப் படங்களில் இடம் பெறுவதற்கு அப்பாடல் பெற்ற வெற்றி காரணமாயிற்று.
பல ஆண்டுகள் ஓடிய பரவசம் : சிந்தாமணி அம்பிகாபதி
    1937ஆம் ஆண்டு எம்.கே.டி. பாகவதருக்குச் சாதனை ஆண்டு.  அந்த ஆண்டில்தான் அவர் பாடி நடித்து வெளிவந்த “சிந்தாமணி“ திரைப்படமும், “அம்பிகாபதி“ திரைப்படமும் பட்டி தொட்டிகளில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியன.
    “சிந்தாமணி“, பாகவதர் இசைவானில் சிந்தாமல் சிதறாமல் பெரு வெற்றியைத் தந்த மாமணியாய் மாறியது.
    பாகவதருக்கு ஈடுகொடுத்து அப்படத்தின் மறக்க இயலாப் பாடல்களைப் பாடி, பாகவதருக்கு மேலும் புகழ் சேர்த்துத் தந்தது கன்னடப் பாடகி கே. அஸ்வத்தம்மா.
    “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி“ என்று பாகவதரின் பெரும் புகழ்பெற்ற பாடல் சிந்தாமணியில்தான் இடம் பெற்றது.
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    மாதரசே பிழையேது செய்தேன் சுகுண
    எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ?
    எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ ஓடாதே!
    கண்ணையிழந்தவன் நீயோ நானோ
    கண்ணா நீ வேறு நான் வேறோ?
    எவன் சொன்னவன்
    விண்ணும் கண்ணும் நிறைமுகில் வண்ணனே
    விறுப்பும் வெறுப்பில் பரஞ்சோதிப் பொருளே இன்று
   
ஒவ்வொரு சொல்லாகப் பதம் பிரித்து, கையறுநிலையில் பாகவதர்
    கண்ணை இழந்தவன் நீயோ!.“
என்று சொல்லி, அதற்கு அடுத்து “நானோ“ என்ற சொல்லைப் பாகவதர் பாடி நடித்து போது அரங்கில் கர ஒலி எழுந்தது.
    இன்றிருப்பதைப் போல் திரைபடம் வருவதற்கு முன்பே இசை வெளியீடுகள் வந்ததில்லை.  படம் வெளிவந்து எந்தப் பாடல் புகழ் பெறுகிறதோ அதைமட்டும் மூன்று நிமிடத்திற்குள் சுருக்கி இசைத் தட்டில் பதிவு செய்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது. “சிந்தாமணி“ நூறு நாட்களைத் தாண்டி ஓடிய நிலையில் எம்.கே.டி. பாகவதர் இசைத்தட்டு வெளிவந்தால் படத்தின் வெற்றி குறையும் என எண்ணி உரிமம் தர மறுத்தார்.
    “பேசுந்தரமாகக் காதல் பரவசமானால்
    தேகம் மறந்தேனே லோகம் மறந்தேன்“
எனும் பாடலும்
    “கற்பினிற் கனியே என் கண்மணியே
    நான் காண்பேனோ
    உன் போல் இனியே
    அற்பன் உனையே நான்
    அறியாத அவலமானேன்“
பாடலும்
    “பஜனை செய்வோம்
    கண்ணன் நாமம் – இனி
    பந்தமறுத்தருளும் பரந்தாமனை
    நினைந்தடி பணிவோம்“
எனும் பாடலும்
“ஜெகமதியே ஜெகதனாவது ஏதுளது?
சகலமுமவனே சரா சரங்களெதிலும் நிறைந்த
நான்குவகைத் தோற்றமோடு
ஏழு வகைப் பிறவியாதி
என்பத்து நான்கு லட்சம் சீவராசிகளிலுமவனே“
பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றன பாகவதரும் அஸ்வத்தம்மாவும் இணைந்து பாடிய இணைப்பாடலான
“மாயப்ரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை
வஞ்சமில்லாத மெய்க் காதல்லதில்லை
இந்திர போகமும் ஸ்வர்க்கமும் வேண்டாம்
ஈருடல் ஓருடல் போலினி மேலோர்
நிமிஷமும் நாமே பிரியலாகாது“
என்று பாடலை இசைத்தட்டு நிறுவனத்தார் வெளியிட விரும்பினர்.  பாகவதர்
மறுக்கவே, அவரது குரலைப் போன்ற “சாயல் உடைய துறையூர் ராஜ கோபால் சர்மாவைப் பாட வைத்து வெளியிட்டனர்.  எம்.கே.பி. குரலைக் கேட்டுப் பழகிய நேயர்கள் கண்டனம் தெரிவித்தனர்.  படம் நூறு நாட்களை நெருங்கிய நிலையில் பாபநாசம் சிவன் எழுதிப் பாகவதர் பாடிய
“ராதே உனக்குக் கோபம்
ஆகாதபடி“ பாடலும்
“ஞானக் கண் ஒன்று“
பாடலும் பாகவதர் குரலில் இசைத்தட்டில் வெளிவந்து சாதனை படைத்தது.
    “சிந்தாமணி“ வெளியான 1938ஆம் ஆண்டுதான் “அம்பிகாவதியும்“ வெளிவந்தது.  தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையிலிருந்து திரை உலகை மீட்டெடுத்த படம் அதுதான்.
    வசனகர்த்தா இளங்கோவன் அறிமுகமாகித் தெள்ளு தமிழ் நடையில் “அம்பிகாவதியைச்“ செதுக்கினார்.
    பாகவதர் – சந்தானலட்சுமியின் காதல் காட்சிகள் பார்க்கிற பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தன.  கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் மதுரமும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
   
“உலகினில் இன்பம் வேறுண்டோ?
    உயிர்களுக்கோ ஆறுதலுண்டோ?
மலரயன் படைப்பில் ஆணோடு பெண்ணும்
குலவி மகிழுமொரு கலவியின் பலமது
பிரமன் நாவில் கொண்டான்.  பெருமாள்
மார்பில் கொண்டான்
அவன் மெய்ப்பாதி கொண்டான் பேசவாயுண்டோ
பரலோகக் கவலைப் பட முடியுமோ?
இங்கு பரமானந்தத் தெய்வீகக்
காதலது“
என்று பாகவதர் பாடியபடி சந்தானலட்சுமியை மகிழ்வோடு காண்பது, பாடல் பாடி நடித்ததும் திரையுலகிற்கும் புதுமையாகத் திகழ்ந்தது.
“அதிசயிக்க வைத்த அம்பிகாவதி“
“அம்பிகாபதிக்கு மன்னன் சவால் விடுகிறான்.  போட்டியில் தோற்றுவிட்டால் உயிர் போய்விடும்.  ஜெயித்தால் அமராவதி ஒரு பேரின்பப் பாடல் பாடும் போது, ஒரு சிற்றின்பப் பாடலும வந்து விடக் கூடாது“ இதைப் பாகவதர் தன் வெண்கலக் குரலில் தருகிறார். “அம்பிகாவதி“ படத்தில்
“இறையருட் செயலிதை என்னென்பது – என
சிறையும் மரண தண்டனையுங் கண்டு
சிந்தை கலங்காத தெய்வீகக் காதல்
ஒன்றுயிர் போனால் மற்றொன்று முயிர்விடும்
அன்றிலைப் போன்ற என் ஆருயிர்க் காதலி
இன்றென்ன விட்டுயிர் வாழான் அதனாலே
வென்றிடுவேன் மன்னன் பந்தயத்தை என்றன்“
என்று பாடினார் பாகவதர்
    1942ஆம் ஆண்டு பாகவதர் நடித்து வெளியான “சிவகவி“ ஒரு வருடத்திற்கும் அதிகமாகத் திரையங்கில் ஓடிய திரைக் காவியம்.
    ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் இளங்கோவன் வசனத்தில் எஸ். ஜெயலெட்சுமியுடன் பாகவதர் நடித்தார்.  எதிர்நிலைப் பாத்திரமாக ராஜநர்த்தகியாக டி.ஆர். ராஜகுமாரி நடித்தார்.
    அரசவையில் ராஜகுமாரி பாகவதர் மீது அபாண்டமாய் பழிசுமத்தும் போது, வானிலிருந்து சந்திரனே இறங்கிவந்து “சிவகவி தன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதால் கூடத் தீண்டியதில்லை.“  என்று சாட்சி சொன்ன காட்சியில் அரங்கமே அதிர்ந்தது.
    எழுபது வருடங்கள் கழித்து இன்று நாம் கேட்டாலும் சிருங்கார ரசத்தோடு சிவகவியின் பாடல்கள் புதிதாகவே தெரிகின்றன.
“வதனமே சந்திர பிம்பமோ
    மலர்ந்த சரோஜமோ
    மாரனம் போ நீள் விழியோ
    மதுர கானமோ?
    அன்னமோ?
    மடப்பிடி நடையாள்
    புன்னகை தவழ் பூங்கொடியாள்
    புவன சுந்தரியாள்“